வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்.

தற்போது மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுபாடு ஆணையின்கீழ் இருக்கும் நாம் இச்சூழலுக்கு ஓரளவு பழகி விட்டோம் என்றே கூற வேண்டும். பல மனித உயிர்களைப் பழி வாங்கி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரொனா என்ற கண்ணுக்குத் தெரியாத கொடிய அரக்கனை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஒரு வகையில் இந்த அரக்கன் நமக்குப் பல வாழ்க்கை பாடங்களைக் கற்று கொடுத்துள்ளான் என்று சொன்னால் அது மிகையாகாது. கொரொனா கொடுத்திருக்கும் பாதிப்புகள், இழப்புகள், சரிவுகள் என ஒரு பக்கம் இருந்தாலும், இதன் மற்றொரு பக்கம் மிகவும் ஆச்சரியமானது. 90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பணம்… பணம் என்று ஓடிக் கொண்டிருந்தான் மனிதன். அவன் பாசத்தை மறந்தான்,
கடமையை மறந்தான், கடவுளை மறந்தான். பணம் எல்லாவற்றையும் காக்கும் என்று நம்பினான். ஆனால் இன்று? பணத்தை வைத்து என்ன சாதித்தான்? இன்று பணக்கார நாடுகளான ஐரோப்பா நாடுகளில்தான் இக்கொரொனா பாய்விரித்து மல்லாக்கப் படுத்துக் கொண்டிருக்கிறது. பணத்தை வைத்து அவர்கள் எதை சாதித்தார்கள்? கொரொனாவை விரட்ட முடிந்ததா? இல்லையே! உலகமே அடைப்பட்டு வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறது. பொருளைத் தேடி ஓடிய பெற்றோர்கள் இன்று வீட்டில் இருக்கிறார்கள் என்று துள்ளிக் குதிக்கின்றது மழலையர் கூட்டம். நெடுநாளைக்குப் பின்னர் தம் மக்கள் நலம் விசாரித்து ஊட்டி விடுவதில் கண்ணீர் விடுகிறது முதியோர் கூட்டம். மது அருந்திவிட்டு, போதைப்பொருள் உட்கொண்டு கேளிக்கை விடுதிகளில் களியாட்டம் போட்ட கால்கள் இன்று போதுமான உணவு கிடைத்தால் போதும் என்று உணவைச் சேமிக்கத் தொடங்கி விட்டன. இளம் தலைமுறையிடம் பெரும் கலாச்சார சீர்கேட்டை விளைவித்த திரையுலகம் இன்று மூடி கிடக்கிறன.

தொழிற்சாலை இயக்கம் இல்லை. விமானமும் இரயிலும் இயக்கம் இல்லை என்பதால் காற்றின் தரம் உயர்ந்தாயிற்று. அண்டார்டிக்கா பனிப்பாறைகளுக்குப் புது இறுக்கம் கிடைத்தாயிற்று. ஆட்டமும் பாட்டமும் நான் காண்பதே உலகம். தெய்வம் எனக்குக் கைக்கட்டி வழிவிடும் எனச் சவால் விட்டவனை எல்லாம் அஞ்சி, ஒடுங்கி அமர வைத்து விட்டது காலம். தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கிறது. உணவு முதல் தொழில் வரை தன் பாரம்பரியத்தை நினைத்துப் பார்க்கிறான். எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் என்பதை உணர்கிறான். உண்மையில் எது தேவை என்பது அவனுக்குத் தெரிகிறது. தன் திட்டம், கனவு, வேகம், ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து அதெல்லாம் வெறும் மாயை என உணர்ந்து அடங்கியிருக்கிறான் மனிதன். பிரமாண்ட இயற்கை முன் தான் வெறும் தூசு என்பது மானிடன் தெரிந்து கொண்டான்.

அடங்கா யானையைத் தனி சிறையில் பட்டினி போட்டு, அடித்து வழிக்குக் கொண்டு வரும் பாகனைப் போன்று மனிதனைக் கட்டி வைத்துப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது காலம். ஜல்லிக்கட்டு காளையாக வலம் வந்த அவனுக்குச் சரியான மூக்கணாங்கயிறு போட்டுக் கட்டுகிறது காலம். எல்லோருக்கும் பொதுவாக காலதேவன் அடிக்கும் அடியில் உலகம் அடங்கி கிடக்கிறது. காலமோ, இயற்கையோ, கடவுளோ அனுப்பிய கொரொனா மானிட சமுதாயத்திற்கு ஞானத்தின் எச்சரிக்கை! காலம் நினைத்திருந்தால் கொரோனாவைவிட கொடிய நோயை அனுப்பி மானிட சமுகத்தைச் சரித்துப் போட சில நாளிகை ஆகியிருக்காது. ஆனால், அது எச்சரிக்கின்றது. ஆம்! எச்சரிக்கை. மானிட இனத்தை மெல்ல எச்சரிக்கின்றது காலம். அதில் மெல்ல ஞானம் பெற்றுக் கொண்டிருக்கிறான் மனிதன். அந்த ஞானம் நிலைக்காவிட்டால் இதைவிட வலுவாக அடிக்க காலதேவனுக்குத் தெரியாதா என்ன?

தொடரும்…

6 thoughts on “கொரொனாவின் பாடம், தீர்வு….. (பாகம் 1)

  1. JEYANTHY /LINGAPPAN says:

    அருமையான கருத்து பதிவு. மனிதம் மற்றும் உண்மையான மனித வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று உ உணர்த்துகிறது.

  2. இராதாமணி சுப்ரமணியம் says:

    சிறப்பான உமையான கருதுகளை எடுத்து உணர்த்துகிறது. இயற்கையின் சீற்றத்தால் மனிதனின் வாழ்க்கை முறையையே மாறி இருக்கிறது.

  3. KAVITHA SIVARAJAH says:

    வணக்கம்.. யானைக்கும் அடி சருக்கும் என்பதை மறந்த மனிதனுக்கு தனது பேராசை குணத்தை வேரோடு எறிந்தால்தான்… இப்புவி மீண்டும் மலரும்..அதனை மனிதன் அறியனும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *