தமிழகத்து அரசியல் தலைவர்களிலேயே கலைஞர்
கருணாநிதி அவர்களின் பாணியே தனி! அக்காலத்தில்
அவர் குரலில் பேசிப் பார்க்காதவர் யாருமில்லை. தஞ்சைப்
பகுதிகளில் காரில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு
வருகிறவர்கள் கூட ‘மைக்’கைப் பிடித்தால் ‘நஞ்சையும்
புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத்
தரணியிலே…’ என்று தொடங்கி, விளம்பரம் செய்வார்கள்,
கலைஞரின் குரலில்!
பேச்சைத் தொடங்கும்போதே ஏதோ ஒரு வகையில்
கூட்டத்திற்கு கலகலப்பூட்டும் விதமாக பேச்சை
ஆரம்பிப்பார்! இடையே குழந்தைக்கு ‘கிளுகிளுப்பை’
ஆட்டி மகிழ்விப்பதுபோல், கூட்டத்தினரை
மகிழ்விப்பார். ஒரு தலைவர் ‘என்ன பேசுகிறார்?’ என்று
அவரது பேச்சைக் கேட்பதற்கென்று கூட்டம் கூடியது
என்றால் பெரியார், அண்ணா ஆகிய இருவருக்கும் பிறகு
கலைஞருக்குத்தான் அப்படிப்பட்ட கூட்டம் கூடியது!
அவர் மேடையில் பேசுவதைத் திருத்தாமல்,
சுருக்காமல் அப்படியே பிரசுரிக்கலாம். அப்படியொரு
தெளிவு! ஒரு கூட்டத்தில் பேசியதுபோல் மறு கூட்டத்தில்
பேசமாட்டார். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பேச்சல்ல,
அவரது பேச்சு! தனக்கு முன்பு அந்த மேடையில்
மற்றவர்கள் பேசியதைக் குறிப்பிட்டு, அதையொட்டி
ஏதேனும் சொல்வார்! கைத்தட்டலால் அரங்கம் அதிரும்!
நயம்; தெளிவு, கோர்வை, அழகு; நாவன்மை, நகைச்சுவை
– அதுதான் கலைஞர்!
Reviews
There are no reviews yet.