இயற்கை என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தும் இயற்கையே. இயற்கை என்பது இந்த உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் அருளிய வரப்பிரசாதம் ஆகும். அந்த இயற்கை அன்னை நமக்கு அளிக்கும் நன்மைகளோ கோடானுக் கோடி எனலாம். தெளிந்த நீரோடை, தூய்மையான காற்று, ஆரோக்கியமான உணவு, கண்களுக்குக் குளிர்ச்சியான அழகு என இயற்கையின் நன்மைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால், அந்த இயற்கை அன்னைக்கு நாம் பிரதி பலனாக என்ன செய்தோம்? மரங்களை வெட்டினோம், காடுகளை அழித்தோம், ஆறுகளில் குப்பைகளைக் கொட்டினோம், கடலில் கழிவுகளைக் கலந்தோம், திறந்த வெளியில் குப்பைகளை எரித்தோம், விலங்குகளை வேட்டையாடினோம். இதுபோன்று இன்னும் பல தீமைகளை நாம் தொடர்ந்து இயற்கைக்கு அளித்து வந்தோம். இதுவரையில் நாம் செய்து வந்த தவறுகளை உணர்த்துவதற்காகவே நமது இயற்கை அளித்த கொரொனா என்ற இந்த நச்சுயிரி.
உலகின் ஒவ்வொரு மனிதனும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் இந்த கிரகமும், அதில் வாழும் எல்லா உயிரினங்களும் இன்புற்று ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் உயிர்வாழ முடியும். நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி ஆகிய ஐம்பூதங்களையும் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மனிதர்களையே சாரும். நமது பிரார்த்தனைகளும் இவற்றை வலியுறுத்தியே இருக்க வேண்டும்.
நமக்கு தெரிந்து இந்த ஒரு உலகம்தான். அதில் சமநிலையை நாம் பேண வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழும் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து தூய்மையான பூமியை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும். கடவுளின் அனைத்துப் படைப்புகளையும் மதித்து போற்ற வேண்டும் என நமது குழந்தைகளுக்கும் இனி வரும் சந்ததியினருக்குக் கற்றுக் கொடுப்போம்!
டத்தோ டாக்டர் கு. செல்வராஜு
குயில் ஆசிரியர்,
ஜெயபக்தி பதிப்பகம்.