ஒரே மண்ணில் வளர்கின்ற உரமிடப்பட்ட, உரமிடப்படாத இரு வேறு மரங்களின் வளர்ச்சியில் உள்ள வித்தியாசத்தை உணர்வது போல் வாசிப்புப் பழக்கம் உள்ளவர், வாசிப்பு பழக்கம் இல்லாத இரு வேறு மனிதர்களிடையே உள்ள வித்தியாசத்தை நம்மால் நன்கு உணர முடியும்.
வாசிப்பு ஒன்று மட்டுமே ஒரு மனிதனை அறிவுப்பூர்வமாக மாற்றும் ஆற்றல் கொண்டது என ஜெர்மன் நாட்டினர் முழுமையாக நம்புகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களில் 100% வாசிப்பு பழக்கம் கொண்டுள்ளனர். ஜெர்மன் நாட்டில்தான் முதன்முதலில் வாசிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, உலகில் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சி அந்நாட்டு ஃபிரன்க்புர்ட் நகரில் தான் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இன்று உலகில் எல்லா வகையான பொருள்களிலும் மிகவும் தரம் வாய்ந்த பொருள்களாக முதலிடம் வகிப்பது ஜெர்மன் நாட்டு தயாரிப்புதான். அறிவாற்றல் மிக்க சமுதாயத்தை உருவாக்கிய பங்கு வாசிப்புக்குதான் என அவர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர். இதனால் தான் ‘Reading Makes a Man Perfect’ என்று ஆங்கிலேயர்கள் கூறி வருகின்றனர்.
இதன்வழி வாசிப்பு ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நம்மால் உணர முடிகிறது. இந்தப் பெருந்தொற்று காலக்கட்டத்தை நாம் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அதிக புத்தகங்களை வாசிக்கத் தொடங்க வேண்டும். வாசிப்பை நமது வாழ்வில் ஓர் அங்கமாக்கிக் கொள்ள முற்பட வேண்டும். குழந்தை பருவத்திலேயே வாசிக்கத் தொடங்குவதனால் நம் விதியை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை கிட்டும் என்றால் அது மிகையாகாது. ஒரு மரத்தை, செழித்து வளரக் கூடிய மற்றொரு மரத்துடன் பட்டைத் தீட்டுவதன் மூலம் அந்த மரத்தையும் செழித்து வளர வைக்க முடியும். மரத்தைப் பட்டை தீட்டுவதுபோல நமது வாழ்வை மேம்படைய செய்ய வாசிப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை’
என்று நம்முடைய நான்முகனார் தமது திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார். ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே என்று அவர் இந்தக் குறளின் வழி நமக்குச் சொல்கிறார். மேலும் கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் இத்தகைய சிறப்புடைய செல்வமாகக் கருதப்படமாட்டாது என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த செல்வமான கல்வி எப்படிக் கிடைக்கிறது? வாசிப்பதனால்தானே கல்வி கேள்விகளில் நம்மால் சிறந்து விளங்க முடிகிறது. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினால் நம் எதிர்காலமே பிரகாசமாக அமையும். எப்படி மேலை நாட்டவர் சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தை ஒரு கலாச்சாரமாகப் பின்பற்றி வருகின்றனரோ அதுபோல நாமும் வாசிப்பை ஒரு கலாச்சாரமாகப் பின்பற்றி வாழ வேண்டும்.
சிறுவயது முதல் நம்முடைய இளைய தலைமுறைக்கு இந்த வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதில் ஆசிரியர்களும் பெற்றோர்களுமே முக்கியப் பங்காற்ற வேண்டும். குழந்தைகளின் திறமையை உணர்ந்து அவர்கள் விரும்பிப் படிக்கும் நூல்களை வாங்கிக் கொடுத்து அவர்கள் படிப்பதற்கான சிறந்த சூழலையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு வயது பிள்ளைகளுக்கு வாசிக்கத் தெரியாததால் அவர்களுக்குப் பெற்றோர்களே எழுத்துக்களை அறிமுகப்படுத்திச் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் ஒரு பாடப்பகுதியை வாசிக்கும்போது, அவர்கள் சொல் உச்சரிப்பில் பிழை செய்தால் ஆசிரியர்கள் அப்பிழையைத் திருத்த வேண்டும். இவ்வழிகளைச் சிறுவயது முதல் குழந்தைகளிடம் பின்பற்ற செய்தால் நாளடைவில் அவர்களுக்குப் வாசிப்பில் ஆர்வமும் மேலோங்கும்.
தென்னங்கன்றுக்குத் தினமும் நீர் ஊற்றி வந்தால் அத்தென்னங்கன்று தென்னைமரமாகியவுடன் நாம் ஊற்றிய நீரை இளநீராக நமக்குத் திருப்பிக் கொடுக்கிறது. அதுபோலத்தான் சிறுவயது முதல் ஒரு குழந்தையை வாசிப்புத் திறனுடன் வளர்த்தால் நாளடைவில் அக்குழந்தை சமுதாயத்தில் சிறந்த மனிதராக உருவெடுக்கும் என்பது திண்ணம். வங்கி வைப்புத் தொகையில் பணம் சேமித்தால் நமக்கு இலாப ஈவு கிடைக்கும். அதைவிட மேண்மையானது குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை முதலீடு செய்வது. அதன்வழி நம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரிய அளவில் நன்மை பயக்கும் என்பது வெள்ளிடை மலை. எனவே, மாற்றத்தை முன்னிறுத்தி வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவோம். அறிவாற்றல் மிக்க சமுதாயமாக உருமாறுவோம்.
நாலும் தெரிய நாளும் படிப்போம்
வாசிப்பு நமது சுவாசிப்பு
டத்தோ டாக்டர் கு. செல்வராஜு
குயில் ஆசிரியர்
ஜெயபக்தி பதிப்பகம்