வாழ்க்கை என்பது சிலருக்குப் போராட்டமாக சிலருக்குப் பூந்தோட்டமாக இருக்கலாம். பூந்தோட்டமாக அல்லது போராட்டமாக அமைந்தாலும் நாம் கவலையோ பயமோ கொள்ள தேவை இல்லை. வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல மாறி மாறி வரும். தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்களே கிடையாது! தோல்விகளைச் சந்திக்கும் பொழுது நம்மைச் மிளிரச் செய்வது தன்னம்பிக்கையே. தோல்வி என்றவுடன் துவண்டு போகாமல் அந்தப் பயத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். தன்னம்பிக்கை என்பது பிறர் நமக்குக் கொடுத்து வருவதில்லை. ஒரு சிட்டுக் குருவி எப்படி தனக்கான கூட்டைத் தானே உருவாக்கிக் கொள்கிறதோ அதுபோல நாமே தான் தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
யானைக்கு பலம் தும்பிக்கை மனிதனுக்குப் பலம் தன்னம்பிக்கை. மாபெரும் வெற்றிகளைக் குவித்த மாவீரன் நெப்போலியன், “தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெற்றி உன்னை நெருங்குகிறது” என்றார். கவிஞர் கீட்சு, ‘தோல்வி என்பது வெற்றிப் பயணத்திற்கு வழிகாட்டும் நெடுஞ்சாலை’ என்றார். ஏழ்மையில் வாடிய ஹென்றிபோர்டு, அமெரிக்க வீதிகளில் குதிரைகள் பூட்டப்படாத தேரில் பவனி வருவேன் என்று சூளுரைத்தார். கடினமான ஆராய்ச்சியின் மூலம் மோட்டார் வாகனத்தைக் கண்டு பிடித்து பெரும் செல்வந்தர் ஆனார். ஒரு சமயம் பத்திரிகை நிருபர்கள் அவரை அணுகி உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டனர். அதற்கு அவர், ரகசியம் என்று ஒன்றும் இல்லை. எனது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புமே காரணம் என்றார்.
ஹார்லண்டு சாண்டர்சு பலரை அணுகி தனது உணவு முறையை அறிமுகப்படுத்த விண்ணப்பம் செய்தார். எனினும், அவரது விண்ணப்பம் அனைவராலும் நிராகரிக்கப்பட்டது. தனது முயற்சியைக் கைவிடாமல் அவர் தொடர்ந்து போராடினார். இறுதியில், அவர் 1009 முறை தோல்விக்குப் பின் தனது 65ஆவது வயதில் KFC துரித உணவை உலகுக்கு அறிமுகம் செய்து வெற்றி பெற்றார். இன்று அவர் கால்பதிக்காத நாடே கிடையாது எனலாம். அறிவியல் வளராத காலத்தில் கப்பல் படையை அமைத்துப் பல நாடுகளை வென்றான் ராஜேந்திர சோழன். கங்கை வரை படையெடுத்துச் சென்று பல மன்னர்களை வென்று ‘கங்கை கொண்ட சோழன்’ என்று புகழ் கொண்டான். தமிழரைப் பழித்த ஆரிய அரசர்களை வென்று கண்ணகிக்கு இமயத்தில் இருந்து சிலை செய்ய கல்லெடுத்து வந்தான் சேரன் செங்குட்டுவன். இவ்வாறு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு அரிய சாதனைகள் செய்து புகழ் பெற்றவர்கள் பலர்.
உதாரணத்திற்கு நமது தாய் திருநாடு மலேசியாவையே எடுத்துக் கொள்வோமே. நமது நாட்டை மிகவும் குறுகிய காலத்தில் வளர்ச்சி கண்ட நாடாக நமது தலைவர்கள் உருவாக்கினர். அவர்களால் சாதிக்க முடிகின்ற பொழுது அதே நாட்டில் பிறந்து வளர்ந்த நம்மால் ஏன் சாதிக்க முடியாது?
எவராக இருந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால்தான் தலை நிமிர்ந்து வாழ முடியும். எந்தவொரு செயலையும் சிந்தித்து செயல்படுத்தி தன்னம்பிக்கையோடு போராடினால் வெற்றி நிச்சயம். எச்சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழந்து விடக்கூடாது. உங்கள் வாழ்வில் நீங்கள் தேர்வு செய்யும் துறையில் வெற்றிப் பெற நாங்கள் இறைவனைப் இறைஞ்சுகின்றோம்.
டத்தோ டாக்டர் கு. செல்வராஜு
குயில் ஆசிரியர்
ஜெயபக்தி பதிப்பகம்
Dear Sir… Vanakam… I would like to start book shop in my living area…Need ur advice sir pls.. Tq