உலகிலுள்ள எந்தவொரு பொருளையும் இருக்கும் இடத்திலேயே வாங்கும் வசதி இன்றைய தொழில்நுட்ப உலகில் சாத்தியமாகியுள்ளது. பெரும்பாலும் உடை, காலணிகள், அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் என நமக்குத் தேவைப்படும் அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கக் கூடிய வாய்ப்பு தற்போது பரவலாக உருவாகி உள்ளது.

1990களில், இணையம் மூலம் வியாபாரம் செய்ய மிகவும் தயங்கிய உலகம், இன்று அதன் மீது அதீத நம்பிக்கையைக் கொண்டுள்ளது. இணையம், கைத்தொலைபேசியின் ஆதிக்கம் அதிகரித்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், புதிய வணிக முறைகள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. ‘Think locally, Act globally’ என்று சொல்வார்கள். அதாவது எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்து உலகம் முழுவதும் வணிகம் செய்யும் சூழல் தற்போது பரவாலாக உள்ளது. Grab, Foodpanda, shopee, lazada, zalora, amazon, ebay, Alibaba போன்ற இணையம் வழி வர்த்தக நிறுவனங்கள் பெரிய அளவில் தங்களது வியாபாரத்தை மேம்படுத்தி உள்ளன.

ஒரு கடையை வாங்கியோ வாடகைக்கு எடுத்தோ வியாபாரத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கி, நிர்மாணிப்புக்கு ஆட்களை வைத்து வணிகம் செய்வதைவிட எந்தவொரு பொருட்செலவும் இல்லாமல் உங்கள் கைத்தொலைபேசியை மட்டும் வைத்து வணிகம் செய்ய முடியும் என்று சொன்னால் கேட்பதற்கே எவ்வளவு நன்றாக இருக்கிறது. அதுவும் இந்தக் கொரொனா தொற்று காலக்கட்டத்தில் நேரடி தொடர்பு இன்றி பொருட்களை வாங்கவே பெரும்பாலும் மக்கள் விரும்புகின்றனர். அரசாங்கமும் அதையே ஆதரிக்கின்றது. எனவே, இளையத் தலைமுறையினர் இந்தத் தருணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயல வேண்டும். இணையம்வழி வர்த்தகத்தின் மூலம் அவர்களுக்குச் சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு உலகில் முதல் 100 இளம் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற OYO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரித்தேஷ் அகர்வாலையே நாம் உதாரணமாகக் கொள்ளலாம். அவரது வரலாற்றைப் புரட்டி பார்த்தால் அவர் மிகவும் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்தான். இருப்பினும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில் அவர் யோசித்து செயல்படுத்திய ஒரு விஷயம் இன்று உலகப் புகழ்பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. அவரைப் போன்று இன்னும் பலர் இணையம் வழி வர்த்தகம் மேற்கொண்டு பல சாதனைகளைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, Grab நிறுவனர்கள் அந்தோனி தான் மற்றும் தான் ஹுய் லிங், OLA நிறுவனர்கள் பாவிஷ் அகர்வால் மற்றும் அங்கிட் பத்தி, அழகு சாதனப் பொருள்களை வணிகம் செய்த காய்லி ஜெனர் போன்றவர்கள் இணையம் வழி வணிகம் செய்து சாதனைப் படைத்தவர்களே. நம் நாட்டில் ‘ஏர் ஏசியா’ மலிவு விலை விமான சேவையை உருவாக்கிய டோனி பெர்னாண்டஸ் இணையம் வழி தனது வியாபாரத்தை விரிவுபடுத்தினார். இவர்கள் அனைவரும் இதன்வழி பலருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போன்றவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இணையம் வழி வர்த்தகத்தில் மலேசிய இந்திய இளைஞர்கள் சாதனை படைக்க வேண்டும். நமது எதிர்காலத்தை நாம்தான் நிர்ணயிக்க வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை முன்னெடுத்து வெற்றி காண்போம்.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!

டத்தோ டாக்டர் கு. செல்வராஜு
குயில் ஆசிரியர்
ஜெயபக்தி பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *