கொரொனாவிலிருந்து விடுப்பட்டு விட்டோம் என்று எண்ணிக் கொண்டு பலர் பாதுகாப்பு அம்சங்களை முறையாகப் பின்பற்றாமல் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனால், நாட்டில் கொரொனா பாதிப்பு சம்பவங்கள் மீண்டும் இரண்டு இலக்க எண்ணை அடைந்துள்ளது. இது நீண்டு கொண்டே சென்றால் முன்பைவிட மிகப் பெரிய பாதிப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனப் பிரதர் மலேசிய மக்களை எச்சரித்துள்ளார். தற்போது நமக்கு வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைக்கு உட்பட்ட இந்த நடமாட்டக் கட்டுப்பாடை நாம் முறையாகப் பயன்படுத்த தவறினால் இந்த நடமாட்டக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படலாம் எனவும் விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். எல்லா உலக நாடுகளிலும் கொரொனாவின் இரண்டாம் அலையின் தாக்கம்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை நாம் அறிவோம். இதனை மனத்தில் கொண்டுதான் நமது பிரதமரும் நம்மை இவ்வாறு எச்சரித்துள்ளார்.
இச்சூழலிலிருந்து நாம் முழுமையாக விடுப்படும் வரை கட்டுபாட்டில் வழங்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறைகளைப் பின்பற்றி ஆரோக்கியமான சூழலை நாம் உருவாக்க முற்பட வேண்டும். சுகாதார அமைச்சின் தகவலின்படி கோவிட்-19 தொற்று காற்றில்தான் அதிக வேகமாக பரவுகிறது என்பது உறுதியாகிறது. இதன் காரணமாக, முகக்கவரி அணிவதை அரசாங்கம் தற்போது கட்டாயமாக்கியுள்ளது. பொது இடங்களில் முகக்கவரியை அணிய தவறியவர்களுக்கு RM 1000 அபராதம் அல்லது சிறைதண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே செல்லும்போது மறவாமல், தவறாமல் முகக்கவரியை அணிந்து செல்லப் பழகிக் கொள்ளுங்கள்.
கோவிட்-19க்கான மருந்துகள் ஒரு சில நாடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டு தற்போது பரிச்சார்த்த நிலையில் உள்ளன. இன்னும் இதற்கான மருந்துகள் முழுமையான முறையில் அமல்படுத்தப்படவில்லை. உலக சுகாதார அமைச்சின் பரிந்துரைகள், உத்தரவுகளைப் பொருத்து உலக நாடுகள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில், மலேசிய சுகாதார அமைச்சு அதன் கடமையை மிகவும் சிறப்பாக ஆற்றி நம் நாட்டை முற்றாக கொரொனா இல்லாத பூமியாக மாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. சுகாதார அமைச்சின் இந்த அரிய முயற்சிக்கு நாம் அனைவரும் துணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இரவு பகல் பாராது அவர்கள் ஆற்றிய சேவையின் பலனாக மலேசியாவில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை ஓரிலக்க எண்ணையே பதிவு செய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஈரிலக்க எண்ணைப் பதிவு செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரு சிலரின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே நம்மால் முழுமையாக இதிலிருந்து விடுபட முடியும். மேலும், இந்தப் புதிய வழக்கமுறைக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. இல்லையென்றால், இந்தச் சூழல் இன்னும் இக்கட்டான நிலைக்கு நம்மை இட்டுச் சென்றுவிடும்.
நாம் வீட்டில் இருக்கும்போது எவ்வளவு சுத்தமாக, பாதுகாப்பாக இருக்கின்றோமோ அதைவிட மேலாக வெளியே செல்லும் போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்களின், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புக்காக மட்டுமின்றி அனைவரின் பாதுகாப்பையும் கருதி செயல்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகிறது. இதன் மூலம் நம்மால் இந்தக் கொரொனா தொற்று சங்கிலியை உடைத்து அதிலிருந்து விடுபட்டு முழுமையான வெற்றியை நிலைநாட்ட முடியும் என்பது திண்ணம்.
டத்தோ டாக்டர் கு. செல்வராஜு
குயில் ஆசிரியர்
ஜெயபக்தி பதிப்பகம்
Awesome