இன்று மே 16. நமக்குக் கல்விக் கண்களைத் திறந்து வைக்கும் ஆசிரியத் திலகங்களுக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தும் இனிய ஆசிரியர் தினநாள். முதலில் இத்தினம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு வெற்றுத்தாளாய் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் நம்மை, ஒரு புத்தகமாய் வெளிக்கொணருபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி, நம் பாதையில் வெளிச்சங்களைப் பாய்ச்சும் தெய்வங்கள் அவர்கள். அப்படிப்பட்ட தெய்வங்களை நாம் பூஜிக்கும் நாளே இந்த ஆசிரியர் தினம்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன், தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையருடன் செலவிடுவதை விட ஆசிரியருடன் தான் அதிகம் செலவிடுகிறான். ஆதலால், மனிதனின் வாழ்வில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. மாதா, பிதா, குரு தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தை தனது தாய் தந்தையருக்கு அடுத்து நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, மரியாதை, கல்வி என அனைத்தையும் ஆசிரியரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த ஆசிரியரைப் பெருமைப்படுத்துவதற்காகவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒரு குழந்தையை முதன் முதலில் இந்தப் பூமிக்குக் கொண்டு வருபவள் தாய். இரண்டாவதாக அந்தக் குழந்தையைச் சான்றோன் ஆக்குபவர் தந்தை. மூன்றாவதாக அந்தக் குழந்தையைத் தன் சொல்லாலும், எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவே தான் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர் நம் மூதாதையர்.

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என ஆத்திச்சூடியில் பாடியிருக்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்குச் சமமாகப் பார்க்கப்படுபவர். மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்பித்து மாணவர்களுக்கு ஓர் உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மாணவனைத் தன்னம்பிக்கை மிகுந்த மனிதனாக ஆக்குவது ஆசிரியர்கள்தான். இப்படி மாணவர்களின் வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிப்பதால் தான் ஆசிரியர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள்.

இன்னும் 10 அல்லது 20 வருடங்களில் மாணவர்களாகிய நீங்கள் ஒரு பொறியியலாளராகவோ, மருத்துவராகவோ, விஞ்ஞானிகளாகவோ, கணினி நிபுணர்களாகவோ, ஏன் ஒரு பெரும் செல்வந்தராகவோ இவ்வாழ்க்கைப் பாதையில் வலம் வரலாம். ஆனால், உங்கள் ஆசிரியர்கள், இங்கேயே நம்மைப் போன்று இன்னும் பல ஆயிரம் மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாதைகளைக் காட்டிக் கொண்டேதான் இருப்பார்கள்.

கல்வியில் மட்டுமா நாம் வழிகாட்டப்படுகிறோம். அன்பால், பண்பால், எதிர்காலத்தில் குடும்பத்திற்கு நன்மக்களாய், சமுதாயத்திற்கு வைரமாய், நாட்டிற்கு நன்குடிமக்களாய் உருவாக்கப்படுகிறோம்.

 ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

  தெய்வத்துள் வைக்கப் படும்’

என்றார் திருவள்ளுவப் பெருகமனார். அப்படிப்பட்ட சிறந்த மனிதராக, மனித நெறிப்படி வாழ வழிகாட்டுபவர்கள் ஆசிரியர்கள். அவர்களுக்கான, இத்தினத்தைத் கொண்டாடுவது நமக்கல்லவோ பெருமை.
இந்நாளில் நீங்கள் வழங்கும் வாழ்த்துகள், பரிசுகள், விருந்துகள்  மட்டும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டாது. அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நீங்கள் கல்வியில் சிறந்து, வாழ்க்கையில் உயர்ந்து, சமுதாயத்தில் மலராய் மலர்ந்து மணம் வீச வேண்டும். அதுவே நீங்கள் உங்கள் ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் மிகப் பெரிய கௌரவம் ஆகும்.

மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்துவோம்!

டத்தோ டாக்டர் கு. செல்வராஜு
குயில் ஆசிரியர்,
ஜெயபக்தி பதிப்பகம்.

22 thoughts on “ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை

  1. CHANDRA SAGARAN KRISHNAN says:

    அருமை. ஆசிரியர்களின் மகத்துவத்தை சரியாகக் கூறியுள்ளீர்கள். நன்றி.

  2. மு.மகேஸ்வரி says:

    ஆசிரியர் சேவைக்கு அருமையான அங்கிகாரம்.

  3. S.Letchimy Subramaniam says:

    சிறந்த தொகுப்பு.ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

  4. அண்ட்ரு தைரியம் says:

    தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டிலும் ஆசிரியர்கள் இயங்கலை மூலம் முறையே தமது கடமையையாற்றி வருகின்றனர்.

    • திருமதி.தா.மல்லிகா உலுதிராம் says:

      வணக்கம். ஆசிரியர் பணி அறப்பணி .அவர்கள் சேவையை உள்ளார்த்தமாக அங்கிகரிக்கப்பட்டு வரைந்த கட்டுரை.திரு.செல்வராஜு அவர்கட்கு நன்றி.நம் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் 2020

  5. Helen Chandra says:

    ஆசிரியத்தின் உன்னதத்தை உணர்ந்து எழுதியதற்கு நன்றி.

  6. RUKUMANI A/P AMIR SINGH says:

    வணக்கம் ஐயா. கட்டுபாடு ஆணை காலத்தில் கூட, ஆசிரியர்களைச் சிறப்பிக்கும்; பெருமைபடுத்தும் பரிசாக இக்கட்டுரை அமைந்துள்ளது. எக்காலத்திலும் ஆசிரியர் பணி போற்றதக்கது என்பதை ஐயா கட்டுரை எடுத்துரைக்கின்றது. நன்றி ஐயா.

  7. Nantha says:

    மாதா பிதா *குரு*

    அனைத்து ஆசிரியர்களுக்கும்

    “இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்”.

  8. குமார் த/பெ முனியாண்டி says:

    உயிரினை உலகிற்கு படைக்கும் அன்னை முதல் அதிசயம். சான்றோனாக்கி உலகிற்கு அர்ப்பணிக்கும் தந்தை இரண்டாம் அதிசயம். உலகை ஆள உருவாக்கும் பள்ளிச்சாலையில், சொல்லாலும், எழுத்தாலும் என்றும் நம்முன் நிற்கும்ஆச்சர்யமும், அதிசயமும்தான் ஆசிரியர்கள்.

  9. தி.ரத்தினவேலு says:

    இறுதி 3 வரிகளில் ஆசிரியர்களின்
    பெருமையை அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.முத்தான மூன்று வரிகள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *