இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் அனைத்தும் ஆனந்த விகடனில் 1960 டிசம்பர் முதல் 1963 ஜூலை வரை வெளி வந்தவையாகும். மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கும்போது பல கதைகள் சுகம் தந்தாலும் வடிவத்திலும் வளமையிலும் ‘இன்னும் செப்பம் தேவை, தேவை’ என்று என்னை நோக்கிக் கெஞ்சும் குறைகள் மிகுந்த படைப்புக்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. என் கைகளும் அவற்றுக்குப் புதுமை அணி செய்யப் பரபரக்கின்றன…
‘வேண்டாம், அவை எப்படிப் பிறந்தனவோ அப்படியே இருக்கட்டும். அந்தக் குறைகளே அவற்றுக்கு அழகு தருவன; நிறைவு தருவன’ என்று எண்ணி அதிகம் கை வைக்காமல் விட்டு விட்டேன். அழகு என்றால் என்ன, நிறைவு என்றால் என்ன என்று எவரோடும் விவாதிக்க நான் தயாராயில்லை.
இவை கதைகள்! அதாவது மனிதன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள். அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவன கதைகள் என்று யாராவது கூறினால் அவரைப் பார்த்து நான் அனுதாபமுறுகிறேன். பிரச்னைகளுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையென்று யாராவது கூறினால் அவர்களை நோக்கி நான் சிரிக்கிறேன்.
ஆனால் உங்களுக்கு மட்டும் ஒன்று சொல்லி வைக்கிறேன். வாழ்க்கை (Life) என்பது வாழ்வின் (Existence) பிரச்னை; வளர்ச்சி என்பது வாழ்க்கையின் பிரச்னை. கலையும் இலக்கியமும் வளர்ச்சியின் பிரச்னைகள், எனது கதைகள் பொதுவாக பிரச்னைகளின் பிரச்னை.
பிரச்னைகள் தீர்வது இல்லை; பிரச்னைகளை யாருமே தீர்த்து வைத்ததுமில்லை. எல்லாவற்றையும் தீர்த்துக் கட்டிவிடவா வாழ்கிறோம்? மேலும் மேலும் பிரச்னைகளை உற்பத்தி செய்து கொள்ளுவதே வாழ்க்கை. புதிய புதிய பிரச்னைகளை வளர்த்துக் கொண்டால் போதும். அளவிலும் தரத்திலும் மிகுந்த பிரச்னைகள்; மிகுதியான பிரச்னைகள் – மனித குலம் வேண்டுவது இவ்வளவே! தீர்வா? யாருக்கு வேண்டும்?
‘நான்’ என்னுடைய பிரச்னை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தால் அது என் அறியாமைக்கு எடுத்துக்காட்டு. ‘நான்’ என்பது ‘நீ’ மட்டுமல்ல. நீ என்றும், அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் இதுவென்றும் குறிக்கும் எல்லாமே ஒரு ‘நான்’ தான். எனது செயல் யாவும் எனது ஆத்ம திருப்திக்கு மட்டுமே என்று சொல்லிக் கொண்டால் அது ஓர் ஆத்ம துரோகம். ஏனெனில் ஆத்ம திருப்தி என்பது சுயதிருப்தி அல்ல.
ஆன்ம வாதம் பேச விருப்பமுள்ளவர்களை நான் இங்கு ஒரு சம்வாதத்திற்கு அழைக்கிறேன். முதலில் ‘எனக்கு’ ‘உனக்கு’ என்பதைக் கைவிடுங்கள் – இந்த விஷயத்திலாவது…
ஆத்ம திருப்தி என்பது தனியொருவனின் இச்சாபூர்த்தியா?
அது சரி, ஆத்மாவது தான் என்ன?
ஒருவனைத் தாக்கினால் அவனுக்குத் துன்பம் நேரும் என்று அறிவது – என் அறிவு.
அவனைத் தாக்கினால் அவன் துன்புறுவான்; ஆகையால் அவனைத் தாக்கலாகாது என்பது – என் ஆத்மா.
அவனைத் தாக்கினால் அவன் துன்பமடைவான்; இதை நான் சகிக்க முடியாது; அவனை நான் காப்பாற்றுவேன் என்று ஓடி அவனுக்காக நான் துன்புறுவது – என் ஆத்ம பலத்தால்.
ஆம்; ஆத்மா என்பதே என்னிலிருந்து விடுபட்டு எனக்கப்பால் நோக்கும் திருஷ்டி; தன்னலம் மறுத்துப் பிறர்நலம் பேணல்!
‘என்னுடையது; எனக்காக’ ‘எனது திருப்திக்காக’ ‘நான்’, ‘நான்’ என்று அடித்துக்கொள்ளும் சுய காதல் மிகுந்தோர் ஆத்மவாதம் பேச வந்தது ஒரு விந்தை. அத்தகு போலி ஆன்மீகவாதிகளின் மாய்மாலப் பேச்சு பெருகியதனால் தான் பாரத சமுதாயத்தின் வேதாந்த பீடமும், ஆத்ம துவஜமும் கறைபடலாயின.
வாடிய பயிரைக் காணும் போதெல்லாம் வாடுகின்ற அருள் உள்ளம் தான் கலையின் ஆத்மா.
தன்னிலிருந்து வெளிவரவே பக்குவம் பெறாத ‘கூட்டுப் புழு’க்களின் குண வக்கிரங்கள் வாழ்க்கையின் சிறப்புக்களோ இலக்கிய நோக்கமோ, கலையின் ஆத்மாவோ ஆகமாட்டா!
இந்தக் கதைகள் என் திருப்திக்காக மட்டும் எழுதப் பட்டவையல்ல. இவற்றை நான் எழுதினேன் என்பதனால், இவை எனக்கு மட்டும் சொந்தமல்ல. இவற்றைப் பொது நோக்கில் எழுதுவதன் மூலம் நான் திருப்தியுற்றேன். அந்த நோக்கம் நிறைவேறக் குறைபடும் போதெல்லாம் அதிருப்தியும் துயரமும் அடைந்தேன். இவை எனக்கும் உங்களுக்கும் என்று சொல்லுவதைவிட நீங்களும் நானும் இல்லாமல் போகும் நமது எதிர்காலத்துக்குச் சொந்தமாக வேண்டும் என்று நாம் ஆசைப்படுவதன் மூலமே நான் திருப்தியடைய முடியும்.
சரி, இவர்கள் கிடக்கிறார்கள். மற்றவர்களுக்குச் சொல்வேன்:
என் கதைகள் இருந்து பொழுதைக் கழிக்கவும், உயர் சுமந்து நாட்களைப் போக்கவுமான (Philistine) பொழுது போக்கு இலக்கியம் அல்ல; பொழுதைப் போக்குவதற்காக மட்டும் இவற்றைப் படிக்க வேண்டாமென்று அன்புடன் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.
மேலே சொன்ன எனது நோக்கம் எந்த அளவு இந்தக் கதைகளில் நிறைவேறியிருக்கிறதோ அந்த அளவு எனது முத்திரைகள் இந்தக் கதைகளில் விரவி விழுந்திருக்கின்றன என்று கொள்ளலாம்.
Reviews
There are no reviews yet.