இதுமகாபாரதத்தின் அத்தனை நிகழ்வுகளும் ஒரு மாபெரும் சூதுப்பலகையின் களங்களில் நிகழ்கின்றன என்றால் பெருநிகழ்வுகள் அவற்றின் களமையத்தில் நிகழ்கின்றன. திரௌபதி துகிலுரியப்பட்ட நிகழ்வு அத்தகைய ஒன்று. உண்மையில் அது மகாபாரத மூலத்தில் பல நூற்றாண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்டது. மகாபாரதம் முன்வைக்கும் திரௌபதியின் ஆளுமைக்கும் சரி, பாண்டவர்களின் இயல்புகளுக்கும் சரி, கௌரவர்களின் பெருமைக்கும் சரி, பொருந்தாததாகவே அது உள்ளது. ஆனால் அது மிக முக்கியமான நாடகத்தருணம். எவ்வகையிலோ இந்தியாவின் ஆதாரமான உளவியல் சிக்கல் ஒன்றைக் காட்டுகிறது. பெண்மையின், தாய்மையின் பிரம்மாண்டத்தை எதிர்கொள்ளமுடியாத ஆண்மையின் எல்லைகளைக் காட்டுகிறது. ஆகவே தவிர்க்கக்கூடியதும் அல்ல. இந்த இரட்டைத்தன்மைதான் இந்நாவலின் மையம். ஆகவே இது இரட்டைமை என்னும் சரடையே பின்னிப்பின்னிச் செல்கிறது.
இந்தியப்பண்பாட்டின் இரட்டைத்தன்மை அதன் வேதங்களில், அரசியலில், பண்பாட்டுநிகழ்வுகளில் அனைத்திலும் முகம் கொள்வதை இந்நாவல் காட்டுகிறது. வெண்முரசில் அதன் முதல்நாவல் முதல் உருவாகிவந்துள்ள அடிப்படையான மோதல் இந்நாவலில் முனைகொள்கிறது. அவ்வகையில் பன்னிரு படைக்களம் திகிரி சுழன்று திரும்பும் புள்ளி. வெண்முரசின் இதுவரையிலான நாவல்களை வாசித்து, பிரதிக்குள் பின்னிச்செல்லும் உட்பிரதியை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்குரியது இதன் கூறுமுறை.
Reviews
There are no reviews yet.