மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும் என்பதை அனைத்து தமிழர்களும் விரும்புவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் ஆர்வலர்கள் நிச்சயம் அதற்காக தங்கள் உயிரைக் கூட பணையம் வைப்பார்கள். அந்த அளவிற்கு தமிழின்பால் நேசம் கொண்டவர்கள் இருக்கின்ற நிலையில் இன்னும் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பிற மொழி பள்ளிகளுக்கு அனுப்பும் சூழலும் இருக்கத்தான் செய்கிறது. சீனர்களை எடுத்துக் கொண்டோமானால் அவர்களில் 96% பேர் தங்கள் பிள்ளைகளை அவர்களின் தாய்மொழி பள்ளிகளுக்குத்தான் அனுப்புகின்றனர். ஆனால், நமது தமிழர்களில் 56% மட்டுமே தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். மீதம் 54% பேர் தேசியப்பள்ளிகளுக்கும் மற்ற பள்ளிகளுக்கும் அனுப்புகின்றனர் என்பதை கல்வி அமைச்சின் புள்ளி விபரங்கள் காட்டுகின்றனர். இஃது உண்மையிலேயே கவலைக்கிடமான ஒரு விஷயமாகும். இதனை முதலில் நாம் சரி செய்ய என்னனென்ன நடவடிக்கைகளை எல்லாம் கையாள வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
இச்சிக்கலுக்கான காரணத்தை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என்று நினைப்பவர்களைவிட தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ஆனால் அதற்கான வசதி எங்களுக்கு இல்லையே என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் தூர இடைவெளியை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். ஆகவே, போக்குவரத்து வசதி இன்மையே முதல் காரணியாக இங்கு அமைகின்றது.
சமுதாய ரீதியில் அரசியல் தலைவர்கள், தமிழர்களை வைத்து அரசியல் ஆளும் அரசியல்வாதிகள், சமுதாயத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அரசு சார்பற்ற இயக்கங்கள் இதற்கான சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். சீனர்களைப் போல நாமும் 90 முதல் 96 சதவிதம் இடத்தைப் பிடிப்போமானால் நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகளை எவராலும் அசைக்கவே முடியாது. ஒட்டுமொத்த தமிழர்களும் தமிழை நேசிக்கத் தொடங்கி விட்டால் யாரும் நம்மை அழிப்பதற்கான வாய்ப்பு நிச்சயமாக கிட்டாது.
எனவே, தயவு செய்து இதுபோன்ற சூழ்நிலை உருவாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும். இந்த முயற்சியில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறந்த நிலையில் தமிழ்ப்பள்ளிகளை நிலைநாட்ட முடியும் என்பதை சிந்தித்து முன்னெடுக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு நிறைய உதவிகளை செய்து வரும் தமிழ் ஆர்வலர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்களை எல்லாம் அடையாளம் கண்டு ஒன்றிணைத்து தமிழ்ப்பள்ளிகளை எப்படி மென்மேலும் உயர்த்துவது என்பது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும். இன்று சீனப்பள்ளிகளைப் பார்த்தோமானால், ஒவ்வொரு வகுப்பறையிலும் குளிர்சாதன வசதி உள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட சீனப்பள்ளிகளை நாடு முழுவதும் நம்மால் காண முடிகிறது.
அதேபோன்று ஒரு சூழ்நிலை தமிழ்ப்பள்ளிக்கு உருவாகும் என்றால் தமிழர்களிடையே பெரும் மாற்றத்தை நாம் காணலாம். தமிழ்ப்பள்ளி மீதுள்ள ஈடுபாடும் அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும் போது எல்லோரும் தங்கள் பிள்ளைகளைக் கட்டாயம் தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்பும் சூழல் உருவாகும். இன்று தகவல் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தமிழ்ப்பள்ளியை மூட வேண்டும், தாய்மொழி பள்ளிகள் இருக்கக் கூடாது எனப் போர்க்கொடி தூக்கிக் கொண்டு சிலர் அரைக்கூவல் விடுத்து வருகின்றனர். நாம் மேற்கொள்ளும் இந்த முயற்சியானது எந்தவொரு அரசியல்வாதிகளும் தனிமனிதனும் இதுபோன்று கூற முடியாத சூழ்நிலையை நிச்சயம் உருவாக்க முடியும் என நாங்கள் நம்புகின்றோம். இதை நன்கு உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட்டு நமது நாட்டில் தாய்மொழி பள்ளிகள் நிலைத்திருப்பதற்கும் தமிழ்மொழி அனைவராலும் பேசப்படுகின்ற ஒரு மொழியாக இருக்கவும் நாம் அனைவரும் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி, வணக்கம்.
டத்தோ டாக்டர் கு. செல்வராஜு
குயில் ஆசிரியர்
ஜெயபக்தி பதிப்பகம்.