பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று நிறைய பெற்றோர்களின் சிந்தனையில் குழப்பமான சூழ்நிலையில் ஓடிக் கொண்டிருப்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. நிறைய பெற்றோர்கள் என்னிடம் நேரடியாகவே தொடர்பு கொண்டு இது குறித்து ஆலோசனை கேட்ட சம்பவங்களும் உள்ளன. இதுபோன்று யோசித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் ஒரே பதிலாக இந்தக் காணொளி மூலமாகக் கூறலாம் என இந்தப் பதிவை நான் செய்கிறேன்.
குறிப்பாக, பெற்றோர்களாகிய நாம் ஒன்றை உணர வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனை என்பது எல்லாக் காலக்கட்டத்திலும் வந்து போகக் கூடிய ஒன்றுதான். பிரச்சனையே இல்லாத உலகம் ஒன்று நிச்சயமாக இருக்க முடியாது. எல்லாக் காலக்கட்டங்களிலும் சில பிரச்சனைகள் தோன்றி மறைவதை நாம் பார்த்துள்ளோம். அதுவும் குறிப்பாக, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற மிகப் பெரிய பேரிடர்கள் வருவதை சரித்திர பூர்வமாக நாம் அறிந்துள்ளோம். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் இந்தக் கோவிட்-19.
சாலையில் பயணம் செய்தால் விபத்தாகி விடும் என்று சாலையில் பயணிக்காமலா இருக்கின்றோம்? விமானத்தில் பயணம் செய்தால் ஆபத்து என்று விமானப் பயணம் மேற்கொள்ளாமலா இருக்கின்றோம்? கப்பலில் சென்றால் மூழ்கி விடும் ஆபத்து உள்ளது என்று கப்பலில் செல்லாமலா இருக்கின்றோம்? அதுபோலதான் வாழ்க்கையிலும் எந்த விபத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் உருவாக்கிக் கொண்டு அதிலிருந்து எப்படி மீள்வது என்பதை மனத்தில் எண்ணிக் கொண்டு பயணம் செய்வதுதான் சாலச்சிறந்தது. அதைவிடுத்து பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்புவதா இல்லையா என்ற கேள்வி எழ இங்கு வாய்ப்பு இருக்கக் கூடாது. ஏனென்றால், நமது மலேசிய அரசாங்கம் மிகவும் பாடுப்பட்டு மிகவும் அதிக எண்ணிக்கையிலான மக்களை இந்தப் பேரிடரிலிருந்து காப்பாற்றி இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாது, இந்நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் மூலமாக நம்மை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில் இப்போது அவர்களின் ஆலோசனைபடி குறிப்பாக சுகாதார அமைச்சின் ஆலோசனைபடி எல்லா விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதே சரி என்று நான் கருதுகின்றேன்.
காரணம், காலம் பொன்னானது. கடந்து போன காலத்தை நாம் மீண்டும் பெற முடியாது. காலம் எந்தச் சூழ்நிலையிலும் நமக்காக காத்திருக்காது. குழந்தைகளின் வாழ்க்கையில் காலம் என்பது முக்கியமானது. அதுவும் குறிப்பாக, கல்வி கற்கும் காலம். இளமையில் கல் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால், இந்த இளமை காலத்தைத் தவற விடாமல் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி வாழ்க்கையில் வெற்றி பெற செய்யும் தலையாய கடமை பெற்றோர்களாகிய நமக்கு உண்டு. அந்த வகையில் ஒன்றை மட்டும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் குறிப்பாகச் சொல்லித் தர வேண்டும். இதுவரையில் இல்லாத அளவிற்கும் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது. அரசாங்கம் குறிப்பிட்ட எல்லாப் பாதுகாப்பு அம்சங்களையும் எப்படி செயல்படுத்துவது, அதனால் என்னென்ன நன்மைகள் கிட்டும், பின்பற்றவில்லை என்றால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை எல்லாம் பிள்ளைகளுக்குப் பரிவாகவும் பணிவாகவும் எடுத்துச் சொல்லி மிகப் பாதுகாப்புடன் பள்ளிகளுக்குச் சென்று வருவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.
அதோடு மட்டுமல்லாது, பள்ளியை விட்டு வீடு திரும்பியவுடன் அவர்களுக்கு என்னென்ன பாதுகாப்புகளை வழங்க வேண்டுமோ அதையெல்லாம் வழங்க நாம் தவற கூடாது. ஆவி பிடிப்பதன் வாயிலாக எது இருந்தாலும் கரைந்து விடும் என்று பலர் கூறுகின்றனர். அதை நாம் செய்யலாம். அதாவது சுடுநீரிலே சற்று மஞ்சள் பொடியைக் கலந்து அதிலிருந்து வரும் ஆவியை நாம் உள்ளிழுப்போமானால் அது நம் நுரையீரலைப் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. இதுபோன்று இன்னும் பல பாதுகாப்பு அம்சங்களை அறிந்து கொண்டு அவற்றை பின்பற்றி குழந்தைகளைப் பாதுக்காக்கலாம். அவற்றை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சைனைகள் ஏற்படும்போது தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில், இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரும் பொழுது பின்வாங்கி வீட்டிலேயே ஒளிந்துவிடாமல் அதை எதிர்த்துப் போராடக் கூடிய பாடத்தையும் அவர்கள் பெற வேண்டும். அந்த வகையில் நம் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும். ஆனால், அச்ச உணர்வு காரணமாக தவறான முடிவுகளை அதாவது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்ற தவறான முடிவை எடுத்து விடாமல் கவனமாக சிந்தித்து செயல்படுங்கள். உங்களின் இந்தத் தவறான முடிவு பிற்காலத்தில் நம் குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்க நேரிடும் என்பதை நாம் உணர வேண்டும். அதனால் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றேன், பெற்றோர்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பு அம்சங்களுடன் பள்ளிக்கு அனுப்புவதே சரி. ஏனேன்றால், அவர்களின் எதிர்காலம் அவர்கள் கையில் இருக்கின்றது. நாம் அதற்கு துணையாக இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் இடையூறாக இருந்துவிட கூடாது. காரணம், என்னதான் வீட்டிலிருந்து பயின்றாலும் பள்ளிக்குச் சென்று படிக்கின்ற கல்வியைப் போல் நிச்சயம் எங்கும் கிடைக்காது. ஆகவே, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை ஒருபோதும் தடை செய்ய கூடாது எனப் பெற்றோர்களிடம் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன். கல்வியோடு தொடர்புபடுத்திய எனது வாழ்க்கை 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆகி விட்டது. ஆகவே, கல்வி என்றால் என்ன? பள்ளிக்கூடம் என்றால் என்ன? பள்ளிக்கூடம் மூலம் மாணவர்கள் என்னென்ன நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்? எந்த வகையான வெற்றிகளை அவர்கள் பெற முடியும்? என்பதை எல்லாம் நான் நன்கு உணர்ந்துள்ளேன். அந்த வகையில் நானும் பெற்றோர் என்ற முறையிலேயே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பிள்ளைகளைக் கட்டாயமாகப் பள்ளிக்கு அனுப்புங்கள். பள்ளியில் அவர்கள் சிறந்த நிலையைப் பெற நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.
நன்றி, வணக்கம்.
கட்டுரை சிறப்பு.
அதை படிப்பவர்கள் கல்வியை நேசிப்பார்கள்.
சிறப்பு
Excellent
அனுப்பலாம். பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
சீரான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
Very Good article. Parents must send their children to school without any hesitation.
பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வழியுறுத்தி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பினால் பாதகமில்லை
பள்ளியில் போதுமான பாதுகாப்பு மாணவர்களுக்கு வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்யும்படி கட்டளைகளை விடுத்து உள்ளன. கவலைப்பட வேண்டிய தேவை இல்லை.
பள்ளியில் பாடம் மட்டும் கற்று கொடுக்கப்படவில்லை அதையும் தாண்டி ஒரு மாணவனை முழு மனிதனாக உருவாக்குகிறது.
அருமையான விளக்கம். கல்வியின் அவசியம் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் விதித்த பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாம். மேழ்கானும் விளக்கம் மிக சிறப்பு .
அருமை.பெற்றோர் இவற்றை உணர வேண்டும்.
கட்டுரை படைப்பு அருமை. பெற்றோர்களுக்கிம் மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதே சிறப்பு. சுமார் மூன்று மாத காலம் அரசாங்க கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு அம்சங்களை முறையாகப் பின்பற்றினோம். ஆதலால் நம் நாடு ஒரு பாதுகாப்பு வட்டத்தில் இருக்கிறது. அந்த வகையில் மாணவர்கள் இப்போது தாராளமாக மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம். அரசாங்கம் விதித்த பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிப்போம்… முறையான கல்வியைக் கற்போம்….
பள்ளியில் போதுமான பாதுகாப்பு மாணவர்களுக்கு வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்யும்படி கட்டளைகளை விடுத்து உள்ளன. கவலைப்பட வேண்டிய தேவை இல்லை.