சமீபக்காலமாக நம்மைச் சுற்றி நிறைய தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணமாக உள்ளன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக உலகில் ஒரு வருடத்தில் 8,00,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் ஒவ்வொரு நாற்பது நொடிகளில் ஓர் உயிர் தற்கொலையால் பிரிகிறது எனவும் வியக்கத்தக்க வகையில் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
சுய மதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டும்தான் இம்முடிவை நாடுகிறார்கள் என்று நினைத்தால் அது மிகவும் தவறு. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் பல பிரபல நட்சத்திரங்களும் கூட தற்கொலை செய்து கொண்டு உலகை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றனர். அண்மையில், மலேசியாவில் திவ்யநாயகி என்ற 20 வயதே நிரம்பிய இளம்பெண் சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றிய அவதூறான விமர்சனங்கள் பரவியதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது பிரபல இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உலக மக்களின் பாராட்டைப் பெற்ற இவர் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒருசில தோல்விகளை எதிர்கொள்ள முடியாமல் இம்முடிவை அவர் தேர்ந்தெடுத்தது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. குடும்பத்தில் ஒரே ஆண் பிள்ளையான இவர் தமது தாயாருக்கு இருந்த மிகப் பெரிய நம்பிக்கையாக இருந்தவர். மிகவும் ஏழ்மையான வாழ்க்கை சூழலில் வாழ்ந்த இவர் தமது விடா முயற்சியில் புகழின் உச்சியை அடைந்தவர். எனினும், வெற்றியைக் கொண்டாட தெரிந்த அளவிற்கு இவருக்கு தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது.
சாக வேண்டும் என்ற ஆசை இல்லாவிட்டாலும் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வாகத் தற்கொலையைப் பலரும் நாடுகின்றனர். அவ்வாறு முயல்பவர்கள் தங்களை அச்சூழலிருந்து காப்பாற்றி அரவணைக்க எவரும் இல்லை என்ற அழுத்தத்தில்தான் அப்படியொரு முடிவை எடுக்கிறார்கள் என்பது உளவியல் ஆய்வுகளின் முடிவாகும். நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நண்பர்கள் இருப்பதை விட துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் நமது துக்கங்களைச் சொல்லி அழவும் நமக்கு ஓர் உற்ற தோழமை இருப்பது மிகவும் அவசியம். தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட இதுபோன்ற நண்பர்களின் ஆலோசனைகளும் அறிவுரைகளும் நிச்சயம் நமக்கு உதவும்.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிமுறைகளையும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட முக்கியமான விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எப்போதும் நேர்மறையான எண்ணங்களையே மனத்தில் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதிர்படும் சிறு சிறு சவால்களைத் துன்பங்களாகக் கருதாமல் அனுபவமாகக் கருதி எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல் பிறர் தனக்கு செய்த உதவிகளுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பது அவசியம். பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும்போது விரக்தி மனப்பான்மையிலிருந்து விடுபடலாம்.
குடும்பத்தில் பெற்றோர்கள் குறைகூறுபவர்களாக மட்டுமில்லாமல், பிள்ளைகளின் திறமைகளை ஊக்குவிப்பவர்களாகவும் பாராட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும். நேர்மறையான எண்ணம் கொண்டவர்களை நண்பர்களாகக் கொள்வதும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை விட்டு விலகி இருப்பதும் நல்லது. மேலும், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பது துன்பத்தில் துவண்டு விடாமல் அதிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டுவர நிச்சயம் உதவும்.
ஒரு பள்ளத்தினுள் விழுந்த கழுதையைக் காப்பாற்ற இயலாத கிராமத்து மக்கள் அதன் அலறலைப் பொறுக்க முடியாமல் மண்ணைப் போட்டுப் பள்ளத்தை மூடி கழுதையைக் கொன்றுவிட முடிவு செய்தனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தன் மேல் விழுந்த மண்ணை உதறி விட்டு அதன் மேல் ஏறி நின்று கொண்டது கழுதை. இப்படியே மண் நிறைந்து மேடாகி பள்ளத்தை விட்டு வெளியே வந்து விட்டது. அதுபோலதான், நமக்கு வரும் துன்பங்கள் வெளியிலிருந்து வருபவை. அதைத் துயரங்களாக கருதி கொண்டு அமிழ்ந்து போகப் போகிறோமா அல்லது தூசுபோல் கருதி அதன் மேலேறி வெளிவரப் போகிறோமா என்பது ஒவ்வொரு தனி மனிதனின் எண்ணங்களைப் பொறுத்தது.
இந்த மனவலிமை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. சந்தர்ப்ப சூழலால் சற்றே தளர்ந்து போய் மன அழுத்தம் மிகுந்திருக்கும் போது உடனிருப்பவர்கள் அவர்களோடு மனம் விட்டு பேசினாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். தேவைப்படுமாயின் மனநல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்றால் மீதிப்பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். பின்னாளில் அவர்கள் சாதனையாளர்களாக மாறலாம். எண்ணங்கள் மாறினால் வாழ்வின் வண்ணங்களும் மாறிடும்.
டத்தோ டாக்டர். கு. செல்வராஜு
குயில் ஆசிரியர்,
ஜெயபக்தி பதிப்பகம்