தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள்தான் தந்தையர் தினம். உலகம் முழுவதும் இந்தத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றி பெருக்குடன் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
தாய் ஒரு குழந்தையைக் கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையைத் தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பைக் கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு. பெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது உண்மைதான். அதே நேரத்தில், தந்தையின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தந்தையும், தனது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கடினமாக உழைத்து பொருள் ஈட்டி, வாழ்வில் தன்னலமற்ற பல தியாகங்களைச் செய்து குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறார்கள். ஒரு தாய் தன் பிள்ளையை எப்போதும் இடுப்பளவு மட்டுமே அணைத்து தூக்குவாள். ஆனால், தந்தையோ தன் பிள்ளையைத் தன் தோளுக்கு மேலே தூக்கி வைத்து அரவணைப்பார். தான் கண்ட அனுபவங்களைவிட தன் பிள்ளைகள் அதிகமான அனுபவங்களைப் பெற வேண்டும் என்பதே அஃது உணர்த்துகிறது.
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல் (குறள் 70)
மகனின் அறிவாற்றலையும் நற்செயல்களைக் கண்டவர்கள், இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தைச் செய்தாரோ என்று வியந்து கூறுகின்ற சொல்லைப் பிள்ளைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே தெய்வப்புலவரின் திருவாக்கு.
இன்றைய அவசர உலகில் இவற்றை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து நம் தந்தையருக்குத் தள்ளாத வயதில் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்கின்றோமா என்பதை நம்முள் நாமே கேட்டுப் பார்த்து நமது தவறுகளைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.
“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!”
அப்பாவின் கஷ்டங்கள் வெளியில் தெரிவதில்லை; அவைகளை மனதில் புதைத்துவிடுவதால். தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ, மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களைச் செய்து வளர்த்திருப்பார் தந்தை.
இந்த நாளில் ஒவ்வொரு குழந்தையும், தங்களின் முன்னேற்றத்திற்குத் தந்தை பட்டபாடு, தியாகத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். முடிந்த பரிசு பொருளைத் தந்தைக்குக் கொடுத்து நன்றி பாராட்டுங்கள்! அதைவிட, “அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!” என்ற நன்றி பெருக்கான அன்பு கலந்த வார்த்தையைச் சொல்லுங்கள். அல்லது அதை அழகாக எழுதி வாழ்த்து அட்டையாக கொடுங்கள்..!
தந்தையால் செய்யப்பட்ட அனைத்து செயல்களும் அடிக்கடி நினைக்கூறப்படாவிட்டாலும் இந்தத் தந்தயர் தின நன்னாளில் அவற்றை நாம் நினைத்துப் பார்ப்போம். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த அனைத்து தந்தையர்களுக்கும் ஜெயபக்தியின் அன்பார்ந்த தந்தையர் தின வாழ்த்துகள்!!!
டத்தோ டாக்டர் கு. செல்வராஜு
குயில் ஆசிரியர்,
ஜெயபக்தி பதிப்பகம்.
அருமையான பதிவு. இரு கண்களில் ஒன்றான தந்தை புகழ் வாழ்த்து கட்டுரை மிக சிறப்பு . ஜெய பக்தி புகழ் ஐயா கு.செல்வராஜ் அவர்களுக்கும் எனது தந்தையர் தின நல்வாழ்த்துகள்.
Sirappana pathivu ithu. Nandri aiya
அருமையான கட்டுரை.