அனைவருக்கும் வணக்கம்.
உலகையே தனது கட்டுப்பட்டுக்குள் வைத்து பல உயிர்களை தனது உணவாக்கி இன்று நம் அனைவரையும் இல்லச் சிறையில் அடைத்து நம்மை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரொனா என்ற நச்சுயிரியை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. இந்நோயை முற்றாக அழிக்கும் பொருட்டு உலக அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் நம் மலேசிய அரசாங்கம் கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மக்கள் நடமாட்டக் கட்டுபாடு ஆணையைப் பிறப்பித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த ஆணையை மதித்து பல அரசாங்க, தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிகளை இடைநிறுத்தம் செய்துள்ளது. அவ்வகையில், நம் ஜெயபக்தி நிறுவனமும் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் கருத்தில் கொண்டு பணிவிடுப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக இன்று நாம் வெளியே நடமாட இயலாமல் இல்லக் கைதிகளாக இருக்கிறோம். எனினும், இச்சூழலை நாம் சிறந்த முறையில் கையாள்வது மிகவும் அவசியம். வீட்டிலேயே இருப்பதால் நம் உடல்நலன் சீர்குலையும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. எனவே, அன்றாடம் எளிய உடற்பயிற்சிகளை வீட்டிலேயே மேற்கொள்ள வேண்டும். நம் உடல் எடையைச் சீராக வைத்துக் கொள்ளவும் இது துணைபுரியும்.
மனமகிழ் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட முடியாத இச்சூழலில் நமக்கு இருக்கும் ஒரே மனமகிழ் நடவடிக்கை தொலைக்காட்சி பார்ப்பது தான். பிள்ளைகள் தொலைக்காட்சிகளில் சிறந்த நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து பார்ப்பதை பெற்றோகள் இவ்வேளையில் உறுதிசெய்து கொள்ள வேண்டும். தொலைக்காட்சியை மட்டுமே பார்க்காமல் வாசிப்பது போன்ற கல்விக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளிலும் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும். மேலும், பெரும்பாலும் புத்தகக் கடைகள் தங்களது இணைய சேவையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையான புத்தகங்களை இணையம் மூலம் அளிப்பாணை (order) செய்து அவர்களை வாசிக்கத் தூண்டலாம். எனினும், அவ்வாறு உங்கள் இல்லம் தேடி வரும் புத்தகப் பொட்டலங்களை நீங்கள் உடனே பிரித்து பிள்ளைகளிடம் கொடுக்காமல் ஓரிரு நாள்கள் வீட்டின் வெளியே வைத்து, பிறகு கொடுப்பதே சிறந்தது. பாதுகாப்பு அம்சங்களை மனத்தில் நிறுத்தி செயல்படுவதே தற்போதைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.
பள்ளிக்குச் செல்ல இயலாத இச்சூழ்நிலையில் ஆசிரியர்களும் மாணவர்களும்
e-learning என்று சொல்லக்கூடிய மின்வழிக்கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆசிரியர்கள், மாணவர்களுக்குத் தேவையான பாடங்களைத் தயார் செய்து மின்னியல்வழி போதிக்கலாம். இதன்மூலம் பெரும்பாலும் பாடத்திட்டங்கள் விடுப்படாமல் இருப்பதைத் தவிர்க்க முடியும். அதே வேளையில், பாடங்களை யாவும் மாணவர்கள் மறக்காமல் இருக்கவும் இது வழிவகுக்கும்.
இதுபோன்று நாம் நம் நேரத்தைப் பயனுள்ள வழிகளில் செலவிடுவதன் மூலம் இந்த நடமாட்டக் கட்டுபாடு முடியும்போது நாம் அறிவார்ந்த மனிதனாகத் திரும்பும் வாய்ப்பு கிட்டும். இக்காலக்கட்டத்தை வெறுமனே செலவழித்தோமானால் பொன்னான நேரத்தை விரயமாக்கிய குற்ற உணர்வு நிச்சயம் நம்மை ஆட்கொள்ளும். இந்நடமாட்டக் கட்டுபாடு உத்தரவை எண்ணி அச்சம் கொள்ளவோ மனம் சஞ்சலப்படவோ அவசியமில்லை. உலகமே தற்போது இச்சூழ்நிலையில்தான் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
மேலும், வீட்டில் இருக்கிறோம், அதிக நேரம் இருக்கிறது, கையில் கைதொலைப்பேசி இருக்கிறது, அரசாங்கம் இலவச இணைய சேவையைக் கொடுத்துள்ளது என்பதற்காகத் தேவையில்லாத தகவல்களைத் தயவு செய்து பரிமாற வேண்டாம். அதாவது, இந்தக் கொவிட்-19 தொடர்பான உண்மையில்லாத வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இதுவே அரசாங்கத்தின் மிகப் பெரிய வேண்டுகோளாகவும் தற்போது அமைந்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள், தீயணைப்பு மீட்புப் படையினர், காவல்துறையினர், ஆயுதப்படை வீரர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்ற முன்வரிசை பணியாளர்களை (front-liners) இவ்வேளையில் நாம் கருத்தில் கொண்டு அவர்களின் நலனுக்காகவும் நாம் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். நமது நலனுக்காக அவர்கள் இன்று பணிப்புரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இன்று நாம் பாதுகாப்பாக வீட்டில் இருப்பதற்கு அவர்களின் பங்கு அளப்பரியது. இவ்வேளையில் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கூறி அவர்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி நடப்போம். அவர்கள் நம்மிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ( #வீட்டிலேயேஇருங்கள்! ) அதனைச் செயலாற்றுவது ஒன்றும் சிரமமில்லையே!
வீட்டிலேயே இருங்கள்!
அவசியம் ஏற்பட்டால் மட்டும் வெளியே செல்லுங்கள்!
ஒருவர் மட்டும் வெளியேறுங்கள்!
அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்!
சுத்தத்தைப் பேணுங்கள்!
பாதுகாப்பாக இருங்கள்!
நம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!
A wonderful essay!
அருமையான பகிர்வு.சூழலுக்கு ஏற்ற கருத்து. அனைவரும் பின்பற்றுவோம்.
Sirrapu
உண்மைதான். மக்கள் நலமுடன் வாழ அரசாங்க ஆணையான நடமாட்டக் கட்டுப்பாடு பின்பற்றுவோம்:
சிறப்பாக உள்ளது. இக்காலக் கட்டத்தில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயனுள்ள வழியில் கழித்தால் அனைவருக்கும் நன்மையே.விரைவில் இதற்கு தீர்வுகக் காண இறைவன் அருளை நாடுவோம்.
அருமையான பகிர்வு.காலத்தோடு கூடிய நற்சிந்தனை.இச் சூழலை நேர்மறையாக யோசித்து நல்ல சந்தர்ப்பத்தை உபயோகிப்பது விவேகம். உடற்பயிற்சி, தியானம்…