10 ஜுன் 2020 முதல் 31 ஆகஸ்ட் 2020 வரை மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் பள்ளிக்கூடங்கள் உட்பட அனைத்து பொருளாதாரத் துறைகளும் கட்டம் கட்டமாக மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும் என பிரதமர் தான் ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் முதல் கட்டமாக, ஜூன் 24ஆம் திகதி எஸ்.பி.எம்., எஸ்.வி.எம்., எஸ்.டி.பி.எம்., எஸ்.டி.ஏ.எம் மாணவர்கள் கல்வி பயில மீண்டும் பள்ளிக்கூடம் திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக, ஆகஸ்ட் மாதத்தில் இதர வகுப்பு மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது.

மற்ற துறைகள் போலவே பள்ளிக்கூடங்கள் நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறைகளை (SOP) பின்பற்றி இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்த பின்னரே பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும். எனவே, ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களது புதிய வழக்கமுறைக்குத் தங்களை பழக்கப்படுத்திக் கொள்வது இவ்வேளையில் மிகவும் அவசியமாகிறது.

கல்வி அமைச்சு வெளியிட்ட பள்ளிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறைகளின் முக்கியச் சாரம்:
• பள்ளிக்கூடத்தை வந்தடைந்த மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
• நடந்து / மிதிவண்டியில் வரும் மாணவர்களை ஓய்வெடுக்க வைத்து பின்னர் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்.
• 37.50C க்கு மேல் இருந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவர்.
• பள்ளிகளில் கண்டிப்பாகத் தனிமைப்படுத்தும் அறை நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
• ஆசிரியர்கள், மாணவர்கள், இதர பணியாளர்கள் என அனைவரின் பாதுகாப்பு கருதி கூடல் இடைவெளி உறுதி
செய்யப்படும்.
• ஓய்வு நேரத்தில் மாணவர்கள் சிற்றுண்டிச்சாலைக்குச் செல்லாமல் கட்டங்கட்டமாக வகுப்பறையிலேயே உணவருந்துவார்கள்.
• மாணவர்கள் சிற்றுண்டிச்சாலையில் பொட்டலமாக்கப்பட்ட உணவை 1 மீட்டர் கூடல் இடைவெளி விட்டு வரிசையில் நின்று வாங்குவர்.
• வகுப்பறைகளில் 1 மீட்டர் இடைவெளியில் மேசைகள் அடுக்கப்படும். அளவுக்கு அதிகமான மாணவர்கள் வேறு வகுப்பறைகளில் அமர்த்தப்படுவர்.
• பாதுகாப்புக் கருதி ஆராய்ச்சிக் கூடங்களிலும் கூடல் இடைவெளி உறுதி செய்யப்படும்.

முன்பு, கல்வியாற்றலை வளர்த்துக் கொள்ளும் ஒரே ஒரு நோக்கத்திற்காக மட்டுமே நீங்கள் பள்ளிகளுக்குச் சென்றீர்கள். ஆனால், இப்பொழுது அந்தக் கல்வியாற்றலை பெறுவதற்கே மற்றொன்றை கற்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் உள்ளீர்கள். ஆம், உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு அல்லாமல் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் மிகப் பெரிய கடமை இப்போது உங்களுக்கு உள்ளது.

அரசாங்கம் வழங்கியிருக்கும் நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு மாணவர்களுக்கும் உண்டு. 1 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடத்தல், முகக் கவசத்தை அணிதல், கைத்தூய்மியைப் பயன்படுத்தி கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சவர்காரத்தைப் பயன்படுத்தி முறையான வழிமுறையைப் பின்பற்றி கைகளைக் கழுவுதல், பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் உடனே குளித்தல் போன்ற நடைமுறைகளை மாணவர்கள் பின்பற்றி செயலாற்ற வேண்டும்.

இவற்றை நீங்கள் பின்பற்ற தவறினால், மீண்டும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் சூழ்நிலையும் பள்ளிகள் மூடுவிழா காணும் நிலைமையும் உருவாக நேரிடும் என்பதை ஒவ்வொரு மாணவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர்களே! புதிய வழக்கமுறைக்கு நீங்கள் உங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டால் மட்டுமே இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாம் விடுப்பட முடியும். நாம் கல்வி கற்பதற்குக் கொரொனா ஒரு தடையாக இருப்பதை நாம் ஒருநாளும் அனுமதிக்கக் கூடாது.

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க, நீங்கள் வீட்டில் இருக்கும் இச்சூழ்நிலையில் கல்வி கற்க தவறாதீர்கள். இப்போது இணையம் மூலமாக நிறைய கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த வாய்ப்பினை தவற விடாதீர்கள். அதேவேளையில் பொது அறிவு நூல்களையும் நிறைய வாசியுங்கள். வாசிப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமான ஒரு அங்கம். அதை மறக்காமல் கடைப்பிடியுங்கள்.

நாலும் தெரிய நாளும் படிப்போம்
வாசிப்பு நமது சுவாசிப்பு
!

டத்தோ டாக்டர் கு. செல்வராஜு
குயில் ஆசிரியர்,
ஜெயபக்தி பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *